இது சமூக, அரசியல், பொருளாதார தளங்களில் பெண்கள் நிகழ்த்திய சாதனைகளையும் எதிர்கால, நிகழ்கால நோக்கங்களையும்
Posted on:
2017-03-09 01:10:16
உலக அரங்கில் பெண்கள் நிகழ்த்தும் வியத்தகு சாதனைகள்
சர்வதேச பெண்கள் தினம் உலகளாவிய ரீதியில் மார்ச் 08ம் திகதி கொண்டாடப்படுகிறது.
இது சமூக, அரசியல், பொருளாதார தளங்களில் பெண்கள் நிகழ்த்திய சாதனைகளையும் எதிர்கால, நிகழ்கால நோக்கங்களையும் எமது தற்கால மற்றும் எதிர்கால சந்ததிக்கு எடுத்துக் கூறும் தினமாக அமைகின்றது
'மாற்றத்திற்காக பலமுறுவோம், அரசியல் அதிகாரத்தினை அடைவோம்' எனும் தொனிப்பொருளில் இவ்வருடம் மகளிர் தினம் கொண்டாடப்படுகின்றது.
உலகில் புரட்சிகர சிந்தனைகள் தோற்றம் கண்ட 1900 களின் ஆரம்பத்திலேயே சர்வதேச பெண்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
மானிடப் பிறவியிலே ஆனும் பெண்ணும் சமமானவர்கள். ஆண்கள் செய்யும் அத்தனை வேலைகளையும் பெண்களும் செய்ய முடியும் என இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
'பெண்களாகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா' எனக் கவி பாடிய - கவிமணி தேசிய விநாயகம்பிள்ளையின் கவிதையில் - பெண்களின் பெருமையினையும் சிறப்பையும் காணக் கூடியதாக உள்ளது.
உலகம் முழுவதிலுமுள்ள பெண்கள் தமது கோரிக்கைகளை வலியுறுத்துவதற்கான ஒரு தினம் சர்வதேச அளவில் பிரகடனப்படுத்தப்பட வேண்டுமென 1910 இல் கொப்பன்ஹேகன் நகரில் கூடிய சர்வதேச உழைக்கும் பெண்கள் மாநாட்டில் ஜெர்மனியைச் சேர்ந்த கிளாரா ஜெட்கின் என்பவர் ஒரு யோசனையினை முன்வைத்தார். இங்குதான் சர்வதேச பெண்கள் தினம் உதயமானது.
இந்த வரலாற்றுத் தீர்மானத்தினைத் தொடர்ந்து 1911ஆம் ஆண்டு மார்ச் 19 இல் முதலாவது சர்வதேச பெண்கள் தினம் ஜரோப்பா மற்றும் அமெரிக்காவின் பல நகரங்களிலும் அனுஷ்டிக்கப்பட்டது.
1917 இல் முதலாவது உலக மகாயுத்த காலப் பகுதியில் ரஷ்யப் பெண்களால் முன்னெடுக்கப்பட்ட சமாதானத்தினைக் கோரும் முக்கியத்துவம் வாய்ந்த போராட்டம் மார்ச் 08முதல் 12ம் திகதி வரை நடத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு பல நாடுகளில் ஒவ்வொரு வருடமும் அனுஷ்டிக்கப்பட்டு வந்த சர்வதேச பெண்கள் தினம் 1975 இல் ஜக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் மேலும் இத்தினம் பரவலாக்கப்பட்டு உலகம் முழுவதும் ஒரே தினத்தில் அதாவது இன்றைய மார்ச் 08 இல் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்த நவீன காலத்திலும் மணித உரிமைச் சட்டம் கடுமையாக பின்பற்றப்படுகின்ற நிலையிலும்
பெண்சிசுவை கருவிலே கொல்வதும்,தெருவில் வீசி எறிவதும், வைத்தியசாலைகளில் விட்டுச் செல்வதும் நடந்தேறிக் கொண்டுதான் இருக்கின்றன.
இன்றைய நிலையில் பெண் சமுதாயம் எட்ட முடியாத, அடைய முடியாத துறைகள் எதுவும் இல்லை.
உலகின் முதல் பெண் பிரதமராக அமரர் சிறிமாவோ பண்டாரநாயக திகழ்கின்றார். இது போல் பாசத்தின் இருப்பிடமான அன்னை தெரேசா, இந்தியாவுக்கு இந்திராகாந்தி, இரும்பு அரசி மார்க்கிரட் தட்சர், இங்கிலாந்தின் மகாராணி எலிசபெத்... இவ்வாறு பலரைச் சொல்லலாம்.
இன்றைய நவீன தலைமுறை சமுதாயப் பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றம் மனித சமுதாயத்திற்கு பெருமை தருகின்றது.
உலகளவில் இயங்குகின்ற தொழிற்சாலைகள் யாவும் பெண்களின் கைகளிலேயே தங்கியுள்ளன. பெண்கள் சமுதாயம் இன்று முதல் நிலையில் உள்ளதனை அவதானிக்க முடிகின்றது.
உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டின் அரசும் பெண்களுக்கு எதிரான வண்முறைகளைத் தடுப்பதற்கு பல்வேறு கடுமையான சட்டங்களூடாக நடவடிக்கை எடுத்து வருகின்ற போதிலும், வன்முறைகள் எதிர்பார்த்தளவிற்கு கட்டுப்படுத்தக் கூடியதாக அமையாதது வேதனை தரும் விடயமே
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் மனித உரிமைகள் பிரகடனத்தின் உறுப்புரை 17 இல் பெண்களது சுயமுயற்சிகள், நாட்டின் நலன் கருதும் அவர்களது நடவடிக்கைகளுக்கு இடையூறு எதுவும் விதிக்கப்படக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.